சிலிகுரி : மோசமான வானிலை காரணமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி 75 ஆயிரம் இடங்களுக்கான கிராமப்புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜடந்த 9ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மம்தா பானார்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜல்பைகுரி மாவட்டம் சேவோக்கில் இருந்து பக்தோக்ராவுக்கு மம்தா பானார்ஜி பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோசமான வானிலை காரணமாக ஹெலிகாபட்ரின் மூன்று பக்கங்களையும் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டதாக கூறப்பட்டது.
மழையும் தீவிரமாக பெய்யத் தொடங்கியதால், மேற்கொண்டு ஹெலிகாப்டரை இயக்க முடியாமல் அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. டார்ஜலிங் மலைபிரதேச பகுதியில் மட்டும் தெளிவான வானிலை காணப்பட்ட நிலையில், அந்த பக்கமாக நோக்கி ஹெலிகாப்டரை இயக்கிய விமானி சேவோக் ராணுவ தளத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விமானம் மூலம் பக்தோக்ராவில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்தடைந்தார். அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.கே.எம் அரசு மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தனர். அவரது இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தெரியவில்லை என்றும் எம்.அர்.ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டுக்காக காத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், பல சிறப்பு மருத்துவர்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பரிசோதித்த பார்த்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனிடையே, மம்தா பானர்ஜி சிரமத்துடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : "மணிப்பூருக்கு ராகுல் பயணம்... ஜூன் 29, 30 செல்கிறார்" - காங்கிரஸ்!