2008ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட ஏழு பேர், டிசம்பர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இன்று (டிச.03) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பீ.ஆர்.சித்ரே உத்தரவிட்டிருந்தார். ஆனால், பிரக்யா சிங் தாகூர் உள்பட நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
கரோனா சூழல் காரணமாக மற்றவர்கள் ஆஜராகவில்லை என, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நாளை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவின் மாலேகான் மசூதி அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.