மகாராஷ்ட்ரா: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று(ஆகஸ்ட் 9) ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும், எழுத்தாளருமான துஷார் காந்தி இன்று காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது, திடீரென அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துஷார் காந்தி, "சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளை ஒட்டி, நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை விட்டு புறப்பட்ட நான் சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன். இதே நாளில் எனது முன்னோர்கள் பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் நானும் கைது செய்யப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு துஷார் காந்தி காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் வெள்ளையனே வெளியேறு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் தெரிகிறது.
இன்று காலையில் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே, துஷார் காந்தி ஆகஸ்ட் கிராந்தி மைதானத்திற்கு செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
துஷார் காந்தி 1960ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அறக்கட்டளையை நிறுவினார். மேலும், பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். காந்தியின் மரணம் தொடர்பாக 'லெட்ஸ் கில் காந்தி' (Let's Kill Gandhi) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதில், காந்தியின் மரணம் குறித்த பல்வேறு உண்மை சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வயநாடு பயணமாகிறார் ராகுல் காந்தி - கேரள காங்கிரஸ் பிரமுகர் தகவல்!