மகாராஷ்டிரா: மும்பை ஜவேரி பஜார் பகுதியில் உள்ள தொழிலதிபரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி போலி ரெய்டு நடத்திய மர்ம நபர்கள் 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஜவேரி பஜாரில் உள்ள தொழிலதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் நான்கு பேர் தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் அடையாளப்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில் அலுவலகத்தில் இருந்த 25 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 3 கிலோ எடையிலான தங்கத்தை போலி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் அளித்தப் புகாரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் அலுவலக ஊழியரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜவேரி பஜார் பகுதியில் போலி வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்ற நிலையில், தற்போது போலி அமலாக்கத்துறை ரெய்டுகள் உள்ளூர் தொழிலதிபர்களை கவலையடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் முடக்கம் ரத்து!