இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பலமடங்கு வீரியத்துடன் பரவிவருகிறது.
நேற்று முன்தினம் 23 ஆயிரத்து 179 பேருக்குப் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 833 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 23 லட்சத்து 96 ஆயிரத்து 340 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 21 லட்சத்து 75 ஆயிரத்து 565 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, தொற்றால் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 353 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 58 பேர் கரோனா தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் மொத்தமாக 53 ஆயிரத்து 138 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மும்பையைவிட புனேவில்தான் அதிகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கைப் பதிவாகியுள்ளது.
அங்கு மட்டுமே நேற்று ஒரேநாளில் நான்காயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் இரண்டாயிரத்து 752 பேர் புனே மாநகராட்சிப் பகுதியிலும் 1,296 பேர் பிம்ப்ரி சிஞ்ச்வாட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 37 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிப்பது, மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி