மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பம்பாய் பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, ரிசர்வ் வங்கி, பாபா அணு ஆராய்ச்சி கழகம், தேசிய ரசாயன, உர நிறுவனம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
நாட்டின் வணிக, வர்த்தக நிதி தலைநகராக கருதப்படும் அங்கு பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையகங்கள், பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மும்பையில் மின்தடை ஏற்படுவதில்லை. எதாவது பிரச்னை காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டாலும் அது துரிதமாக சரிசெய்யப்படும்.
இந் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு, மும்பையில் திடீரென கடும் மின் தடை ஏற்பட்டது. சீனர்களின் சைபர் தாக்குதல் காரணமாக மும்பையில் மின் தடை ஏற்பட்டிருக்கலாம் என புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அப்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டது. இத் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று (மார்ச்.1) ஊடகங்களைச் சந்தித்து பேசிய மகாராஷ்டிரா மாநில மின்சாரத் துறை அமைச்சர் நிதின் ராவத் கூறுகையில், "நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி உண்மைதான். இது தொடர்பாக விசாரணை செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சைபர் துறையிடமிருந்து இது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் நிகழ்ந்த மும்பை மின் தடைக்கு மால்வேர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என மகாராஷ்டிரா சைபர் பிரிவு தெரிவித்திருந்தது. இந்த மின் தடை காரணமாக பல மணி நேரம், ரயில்கள் இயக்கப்படவில்லை. மருத்துவமனைகள் மூடப்பட்டன. நகர்ப்புறங்களில் ஏறத்தாழ 12 மணி நேரம் வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காவலர் உடல் தகுதித் தேர்வு: தேர்ச்சிப்பெற்ற 15 திருநங்கைகள்