போபால் (மத்திய பிரதேசம்): தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கரோனா நோயாளிகளின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும் ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடைவிதித்துள்ளன.
இந்ந நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம், பரத்சிங்கா கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து பயிர், காய்கறிகளின் விதைகளைக் கொண்டு சங்குச் சக்கரம், புஷ்பானம், ஊசி வெடி போன்ற வடிவிலான பட்டாசுகளைத் தயாரித்து வருகின்றனர்.
ஒலி மாசுபாடு, பட்டாசு வெடிப்பதால் வெளிப்படும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், 22 வகையிலான விதைகளைக் கொண்டு, இந்தப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
விதைகளை காகிதத்தில் சுற்றி தயாரிக்கப்பட்டுள்ள, இந்த வகை பட்டாசுகளை மக்கள் வெடிக்கத்தேவையில்லை, இதனை வாங்கி, மணலில் புதைத்து வைத்து தண்ணீர் ஊற்றி வந்தால், அதிலுள்ள விதைகள் மூலம் செடிகளை வளர்க்கலாம்.
இதுதொடர்பாக, சுய உதவிக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், மனிதர்களின் இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, இதுபோன்ற பட்டாசுகளை நாங்கள் தயாரித்துள்ளோம். வீணான காகிதம் மற்றும் விதைகள் கொண்டு எவ்வாறு இந்தவகை பட்டாசினை தயாரிப்பது என்பது குறித்து, ஒரு வார காலம் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.
பரத்சிங்கா கிராமத்தைச் சேர்ந்த 100 பெண்கள் இணைந்து தங்களது கைகளாலேயே இந்தப் பணியைச் செய்துள்ளனர். பட்டாசுவின் உள்ளே இருக்கும் விதைகளின் பெயர்கள், மேலே உள்ள காகிதத்தில் ஒட்டப்பட்டிருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: