லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஒருவர், திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக தனியார் மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் தனது புரொஃபைலை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் மூலமாக அமித் யாதவ் என்ற நபர் பெண் அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். தான் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும், தற்போது லண்டனில் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர். தான் இந்தியா திரும்ப ஆவலுடன் இருப்பதாகவும், இருவருக்கும் திருமணம் முடிந்த பிறகு இந்தியாவில் குடியேறுவதாகவும் அமித் யாதவ் கூறியுள்ளார்.
இருவரும் பழகி வந்த நிலையில், சில நாட்களுக்குப் பிறகு, அந்த இளைஞர் இந்தியாவில் தான் சொத்து வாங்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி செய்யும்படியும் கேட்டுள்ளார். அப்போது பெண் அதிகாரி பண உதவி செய்ய மறுத்ததாக தெரிகிறது. ஆனால், பெண் அதிகாரியை விடாமல் தொந்தரவு செய்த அமித் யாதவ், பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் அதிகாரி, 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அமித் யாதவின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாக தெரிகிறது. சில நாட்கள் கழித்து பெண் அதிகாரி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். அப்போது, அமித் யாதவ், இருவரும் பேசிக் கொண்ட சாட்ஸ் மற்றும் புகைப்படங்களை வைத்து பெண் அதிகாரியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். மேலும், பணத்தை திருப்பி தர முடியாது என்றும் மறுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் அதிகாரி, நேற்று(மே.29) லக்னோவில் உள்ள கான்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பண மோசடி செய்த அமித் யாதவ் மீது நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பெண் அதிகாரி புகாரில் கோரியுள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சைபர் செல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றம்சாட்டப்பட்ட அமித் யாதவின் டெல்லி முகவரியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கான்ட் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் தெரிவித்தார். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேட்ரிமோனி தளங்கள் மூலமாக வரன் தேடும் பழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், மேட்ரிமோனி தொடர்பாக மோசடி சம்பவங்களும் அதிகரித்தே வருகின்றன. பண மோசடி செய்வது, பல திருமணங்கள் செய்வது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு, சென்னையில் மேட்ரிமோனி மூலம் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் மேட்ரிமோனி மூலம் அவர் ஏராளமான பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக பல பெண்கள் வெவ்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்திருந்தனர்.
இதையும் படிங்க: விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி...