நான் ஒன்றுக்கு சராசரியாக 8 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் பணி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல நிறுவனங்களில் கடைநிலை தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். முதலாளி சொல்வதாலும், கூடுதல் நேரம் பணியாற்றினால் அதிகப்படி சம்பளம் கிடைப்பதாலும் எவ்வித யோசனையும் இன்றி ஊழியர்களும் தலையாட்டுகின்றனர். ஆனால், அதிக நேரம் வேலை பார்ப்பது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என உலக சுகாதார அமைப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக 2000-2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் உள்ள தரவுகளை வைத்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில், நீண்ட நேரம் வேலை பார்த்த ஊழியர்கள் பக்கவாதம், இதய நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டில் ஏழு லட்சம் பேர் உயிரிழப்பு
2016ஆம் ஆண்டில் நீண்ட நேரம் வேலை செய்வதன் காரணத்தினால் ஏழு லட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இது 2000ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்புடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு அதிகமாகும்.
72 விழுக்காடு ஆண்களே இறப்பு
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, "வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது. வேலைப் பளுவால் உயிரிழந்தவர்களில் சுமார் 72 விழுக்காடு ஆண்கள்தான். குறிப்பாக, நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது. இறப்புகளில் பெரும்பாலானவை 60-79 வயதுடையவர்கள் தான். அவர்கள் 45 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்தவர்கள் ஆவர்.
தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய நாடுகளில் அதிக அளவில் வேலைப்பளு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் வேலை செய்வது 35 விழுக்காடு பக்கவாதம் ஏற்படவும், 35 மணி முதல் 40 மணி நேரம் வேலை பார்ப்பது 17 விழுக்காடு இதய நோய் ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது.
கரோனாவால் மாறிய வேலை செய்யும் முறை
ஆனால், தற்போது கோவிட்-19 பெருந்தொற்றால் வேலை செய்யும் நேரம் முற்றிலுமாக மாறியுள்ளது. பல நிறுவனங்களில், ’ஒர்க் ப்ரம் ஹோம் திட்டம்’ அமலுக்கு வந்ததுள்ளதால், பணியாளர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், " கோவிட்-19 தொற்றுநோய் வேலை செய்யும் முறையை மாற்றிவிட்டது. பல நிறுவனங்கள், நிதி நெருக்கடியால் ஆள்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக, பணியாட்களை அதிக நேரம் பணியாற்ற நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கு வேலைக்கு மதிப்பு கிடையாது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அரசாங்கங்கள், தொழில் நிறுவனங்களின் கடமையாகும். வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வது ஒரு கடுமையான உடல்நலக் கேடாகும். நீண்ட நேரம் வேலை செய்வது உயிருக்கு ஆபத்தாகும் என்பது குறித்து, அரசு, தனியார் தொழில் நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” எனத் தெரிவித்தார்.