கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தெலங்கானாவில் மே 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாததால், மே 30 ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கின் போது, காலை 6 மணி முதல் 10 மணி வரை என, நான்கு மணி நேரம் மட்டுமே அனைத்து கடைகளும் திறந்து வைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு முதல் வாரத்தில் மக்கள் பயமின்றி ஹாயாகச் சுற்றித் திரிந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கத் தெலங்கானா காவல் துறை முடிவு செய்துள்ளது. பல இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
காலை 10 மணிக்குப் பிறகு, மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது என்பதில் திட்ட வட்டமாக உள்ளனர். முதலில் உணவகங்களில் பார்சல் வசதி இரவு வரை இருந்த நிலையில், தற்போது மதியம் 2 மணியுடன் நிறுத்திட உத்தரவிட்டுள்ளனர்.
அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, பல நேரங்களில் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாய்ஸ், ஆர்டர் இல்லாத நேரத்திலும் சுற்றித் திரிவதாகத் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம்(மே.23) மட்டும் ஊரடங்கை மீறி, வாகனங்களில் சுற்றித் திரிந்த 2,452 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுவரை ரச்சகொண்டாவில் மட்டும் சுமார் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, வாரங்கலில் குறுகிய சாலைகள், காலனியில் சுற்றித் திரியும் மக்களைக் கண்காணிக்க, இருசக்கர வாகன ரோந்துக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு உத்தரவு பலனாகத் தெலங்கானாவில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்த வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கரோனா தொற்றுப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தெலங்கானா மாநில அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.