அதி தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு, வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து வரும் டவ்-தே புயல் அடுத்த, 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, இன்று (மே.17) மாலை, குஜராத் கடல் பகுதியை வந்தடைகிறது அடைகிறது என்றும், நாளை (மே.18) அதிகாலை, குஜராத்தின் போர்பந்தர் - மஹூவா இடையே கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " டவ்-தே புயலானது டியு - வின் தென்கிழக்கில் சுமார் 280 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த புயலானது சுமார் 20 கி.மீ., வேகத்தில் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 150 - 175 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். அகமதாபாத், சூரத், ஆனந்த், பாவ்நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில், கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபடவும் வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் கடலோர பகுதிகளில் வசித்த, 1.50 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.