மும்பை: மலையேறுவது என்பது அவ்வளவு எளிதில்லை. நடுத்தர வயத்தினர் கூட மலையேறுவதில் மிகவும் சிரமப்படுவார்கள். ஏனென்றால், சீரான பாதைகள் ஏதுமின்றி, கல்லும், முள்ளும் நிறைந்த பாதையாகவே அவை இருக்கும். மலையேறுவதற்கு என பயிற்சியும், முன் அனுபவமும் மிகவும் அவசியம்.
அப்படியிருக்க, 2 வயது குழந்தை அசால்ட்டாக 17 கி.மீ., தூரத்தை வெறும் 11 மணிநேரத்தில் கடந்து அசத்தியுள்ளார். கடந்த ஜூலை 31, மகாராஷ்டிராவில் உள்ள தஹானுவில் இருந்து பீமாசங்கர் கோட்டையில் உள்ள ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க, தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றத்தில் 62 பேர் சென்றுள்ளனர்.
அந்த 62 பேரில், 2 வயது 10 மாதங்களே ஆன கேசவி ராம் மாச்சியும் ஒருவர். கேசவி யார் உதவியும் இல்லாமல் சுறுசுறுப்பாக மலையேற்றத்தில் பங்கேற்றதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். வட்குன் கெட்டிபடா மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த மாச்சி தனது மனைவி, சகோதரியுடன் மலையேற்ற நிகழ்வில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அப்போது, அவரின் சகோதரியின் மகளான கேசவி, தானும் அவர்களுடன் வருவதாக அடம்பிடித்துள்ளார்.
இரண்டு வயதான கேசவி எப்படி மலையேறுவார் என அவர்களுக்கு எழுந்த அத்தனை சந்தேகங்களையும், கேசவி தூள் தூளாக நொறுக்கியுள்ளார். இதுவரை எந்த முறையான பயிற்சியும், முன் அனுபவம் இல்லாத கேசவியை, உறவினர் ஆனந்த் மாச்சி வழிநடத்தியுள்ளார். விடாமுயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும் யாருக்கும் எந்த சிரமத்தையும் அளிக்காமல் அந்த 11 மணிநேரத்தில் அசராமல் மலையேறியுள்ளார்.
பிமாசங்கர் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க சென்று கொண்டிருந்த வழியெங்கும் மரங்கள், அருவிகள், பறவைகள், குரங்குகள் என அத்தனை இயற்கை காட்சிகளையும் கேசவி மெய்மறந்து ரசித்துள்ளார். மேலும், விழா காலம் என்பதால் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க அதிக கூட்டம் இருந்ததுள்ளது. அங்கிருந்தவர்களும் கேசவியை கண்டு மிகவும் வியந்து பாராட்டினர்.
இந்த மலையேற்ற நிகழ்வின் இறுதியில், மலையேற்றம் மேற்கொண்டவர்கள் பீமாசங்கர் கோட்டையை சுத்தப்படுத்துதல், மரம் நடுதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற சமூக நல செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள் என மலையேற்றத்தை ஒருங்கிணைத்த தனியார் அமைப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: செயற்கை நகங்களில் செஸ் காயின் வரைந்து அசத்தும் பட்டதாரி பெண்