ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த ராக்கி எனும் 3 வயது தெரு நாய், ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரண்டு முன் கால்களையும் இழந்தது.
ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்த ராக்கியை, ரயில்வே காவல் அலுவலர் ஒருவர் மீட்டு, கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சைக்கு பின் குணமடைந்த நாயினை, அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்திய விலங்குகள் நல அமைப்பு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கூறுகையில், " ராக்கிக்கு நேர்ந்த சம்பவம் ஒரு மனிதருக்கு நேர்ந்திருந்தால் தனது வலியை வார்த்தைகளால் விவரித்திருக்க முடியும். ஆனால் ராக்கியால் தனது வலியை கூறவோ, வெளிப்படுத்தவோ முடியாது. முதலில் ராக்கியால் தனது இரு கால்களைக் கொண்டு நடப்பதற்கு கடினமாக இருந்தது. பலத்த காயத்தால் அதன் இரு பின்னங்கால்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. எனவே ராக்கிக்கென தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கை கால்களைப் பொறுத்தினோம். ஆனால் அதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை.
ராக்கி அதிக துணிவு கொண்ட நாய். இவ்வளவு துயரங்களுக்கு பிறகும், வாழ்வதற்கான தைரியத்தையும், போராடும் குணத்தையும் கொண்டுள்ளது. இந்தியாவில் வளர்க்கப்படும் பல விலங்குகள் தங்களது உரிமையாளர்களாலேயே கைவிடப்படுகின்றன அல்லது துன்புறுத்தப்படுகின்றன. இதுபோன்ற நிலையில் ராக்கி பாதுகாப்புடன் இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தனது இரண்டு கால்களை கொண்டு, கீழ்தாடையின் உதவியுடன் நடக்க பயின்றுள்ள ராக்கியின் வீடியோவினை சமூக வலைதளத்தில் கண்ட லண்டனைச் சேர்ந்த 'வைல்ட் அட் ஹார்ட்' எனும் விலங்குகள் நல அமைப்பினர் தத்தெடுக்க முன்வந்துள்ளனர். இனி ராக்கி அங்கேயே பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும். கார்கோ விமானம் மூலம் ராக்கி இன்று லண்டனுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வருட காலம் எங்களுடன் இருந்ததால், அதன் பிரிவுச் சற்று கவலை அளிப்பதாக, உள்ளது. ராக்கி லண்டனுக்குச் செல்வதை தனது அன்புக்குரிய மகள் திருமணமானப் பின்பு கணவர் வீட்டுக்குச் செல்வதை போல உணர்கிறேன் " என்றார்.
இதையும் படிங்க: ’இவங்கதான் என் குடும்பம்; இவங்களே எனக்குப் போதும்’- கரோனாவால் கைவிடப்பட்ட விலங்குகளை அரவணைக்கும் சுனிதா!