புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஜனவரி 8ஆம் தேதி முதல் ராஜ்நிவாஸ் முன்பு போராட்டம் நடத்த முதலமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்துள்ளார். இதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளார்.
இதுகுறித்து கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில், "ஆளுநர் மாளிகையின் செயல்பாட்டிற்கு எதிராக முதலமைச்சர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகம் நிதி செலவினங்களை கண்காணிக்கிறது. யூனியன் பிரதேச செலவினம் அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்குள், இருக்க வேண்டும்.
மக்களின் பாதுகாப்பு நலனுக்காக கோவிட் மேலாண்மை விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசின் பரிந்துரைகளை கடைபிடிக்க வலியுறுத்தினேன். பிரச்னைகள் எழும் அனைத்திலும் ஆளுநர் அலுவலகம் தலையிடும் என ஏற்கனவே எச்சரித்துள்ளேன்.
புதுச்சேரிக்கு மத்திய அரசால் என்ன வழங்கப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் மறந்துவிடுகிறார். நெருக்கடி காலத்தில் மத்திய அரசு நிதியுதவி திட்டங்களை செய்துள்ளது. டெண்டர், ஒப்பந்தங்கள், கமிஷன் முகவர்கள் இல்லாமல் நேரடியாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
இது ஊழலை பெரியளவில் ஒழித்துள்ளது. புதுச்சேரியின் பொருளாதாரத்திற்கு இது ஒரு பெரிய ஊக்கமளித்துள்ளது. மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. நான் என் கடமைகளையே செய்தேன். முதலமைச்சர் நாராயணசாமி மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்காத மோடியும், கிரண் பேடியும் - நாராயணசாமி தாக்கு!