புதுச்சேரி: சுற்றுலாத்துறை மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் மற்றும் சென்னை கோதே ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதுச்சேரி மெரைன் வீதியில் உள்ள பிரெஞ்சு துாதரகத்தில் லேசர் ஷோ நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் பாடகர்களின் 'டிஜே' நிகழ்ச்சி மற்றும் பிரமாண்ட மின் விளக்குகளில் 'லேசர் ஷோ நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி பிரெஞ்சு துாதர் ஸீஸ் தல்போ பரே, சென்னையில் உள்ள ஜெர்மன் துாதர் மைக்கேல் லா கூஷ்லர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில் வெளிநாட்டவர்களும் ஆர்வத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர். 60 ஆண்டுகளாய் பிரான்சும் ஜெர்மனியும் நட்பு நாடுகளாய் திகழ்கின்றன. இரண்டாம் உலக போருக்கு பிறகு இரு நாடுகளும் நட்பாய் இருப்பதென 1963ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதனை வெளிப்படுத்தும் விதமாக 3டியில் ஒளி ஒலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அடுத்து வரும் காலங்களில் புதுச்சேரியின் பழமை மிக்க பாரம்பரிய மிக்க கட்டிடங்களில் இந்த ஒளி ஒலி நிகழ்ச்சியை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்தாரா? - நாராயணசாமி