குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் எட்டு வயது சிறுவன், தனது தந்தை மீது புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளான். காவல் நிலைய பொறுப்பாளர் உள்பட அனைத்து காவலர்களும் சிறுவனது புகாரை கேட்டனர்.
அப்போது சிறுவன், தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வருவதாகவும், அவரது குடிப்பழக்கத்தால் தான் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளான். தந்தை குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே புகார் அளிக்க வந்ததாகவும் தெரிவித்தான். தனது தந்தையை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தும்படியும் கோரினான்.
சிறுவன் கூறியதைக் கேட்ட காவலர்கள் அனைவரும் வியப்படைந்ததோடு, வேதனைக்குள்ளாகினர். காவல் நிலைய பொறுப்பாளர் சிறுவனை தனது மடியில் அமர வைத்து ஆறுதல் கூறினார். பின்னர் சிறுவனின் தந்தையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, ’இனி மது அருந்தக் கூடாது’ என கண்டித்தார். பிறகு சிறுவனுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்தார். படிப்பு செலவுக்கு பணம் தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: பக்தர்களுடன் பேசும் சிலிக்கான் சாய் பாபா.. ஆந்திராவில் குவியும் மக்கள்!