தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, நடிகர் விஜய் சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், வாக்குச்சாவடி இருக்கும் பகுதியின் சாலைகள் குறுகியதாக இருந்ததாலும், வீட்டிலிருந்து 1 கிமீ தொலைவிற்குள் வாக்குச்சாவடி இருந்ததாதலும் விஜய் சைக்கிளில் சென்றதாகவும் விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், சமூக வலைதளங்களில் விஜய் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டதாக தகவல் பரவ தொடங்கியது. தொடர்ந்து, விஜய்யைப் போல பல இளைஞர்கள் சைக்கிள் ஓட்டி ஸ்டேடஸ் போட்டு வந்தனர்.
அந்த வரிசையில், கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அகிலாஷ், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக நேபாளம் வரை சைக்கிளில் புறப்பட்டுள்ளார். உடற்பயிற்சி ஆசிரியரான அவர், ”பெட்ரோல் விலை அதிகரிப்பதைக் கண்டிப்பது அரசியல் கட்சியினரின் பொறுப்பு மட்டுமின்றி இளைஞர்களின் கடமையும் ஆகும். அனைவரும் போராட முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். ஒற்றை நபராகப் போராடத் தொடங்கியுள்ள அகலேஷை, வழியில் பார்க்கும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கரோனா