ஹூப்ளி: கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் (KIMS) விநோதமான காயத்துடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை (நவம்பர் 20) அன்று காலை 32 வயதான ஒருவர் தனது நண்பருடன் கிம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவசர அறுவை சிகிச்சை
அவர் கையில் நீர் குழாயை (Hose Pipe) வைத்துக்கொண்டும், கழிப்பறை நீர் ஜெட் ஸ்பிரேயை (Toilet Jet Spray) மலக்குடலின் உள்ளே சிக்கிய நிலைமையில் வருவதை அங்குள்ள மருத்துவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஜெட் ஸ்பிரேயை மலக்குடலில் இருந்து நீக்கியுள்ளனர்.
இது குறித்து கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், "அவர் அந்த நிலைமையில் வருவதைக் கண்டதும் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். ஏனென்றால், இது மிகவும் அரிதான, சிக்கலான ஒன்று. அதனால் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டோம்.
முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் குழு அறுவை சிகிச்சை செய்து, அந்த ஸ்பிரேயர் அகற்றப்பட்டது. தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரின் உடல்நிலை சீராக உள்ளது.
கட்டடப் பணியாளர்
அவரின் சகப் பணியாளர் ஒருவரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நோயாளி குடிபோதையில் இருந்தார். உடன் வந்தவரிடம் விசாரித்தபோது, குடிபோதையில் மலக்குடலுக்குள் அதைச் சொருகியதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் விசித்திரமாக இருப்பதால் காவல் துறையின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதால் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர் கட்டடப் பணியாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது பைரிதேவரகொப்பா கிராமத்தில் நடைபெற்றுவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டுவருகிறார்.
அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர் மது அருந்தி கழிப்பறையில் வழுக்கி விழுந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நோயாளி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.