வயநாடு (கேரளா): இசைஞானி இளையராஜாவின் பாடலுக்கு மயங்காத மனங்கள் இருக்காது. இசை என்றால் இளையராஜாதான் என்ற எண்ணம் நம் மனங்களில் காலூன்றி நிற்கிறது. ஆனால் அவரே தனது இதயம் ஒரு கோயில் பாடலில்.. உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே என்ற வரிகளை சேர்த்து இசை அனைவருக்கும் பொதுவானது. அதை வாசிக்க ஒரு ஞானிதான் தேவை என்பது இல்லை எனக்கூறியிருப்பார். அதற்கு ஏற்றார்போல் கேரள மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் ஒருவன் கையில் கிடைக்கும் பொருட்களையேல்லாம் வைத்து தாளம் தட்டி இசையமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அபிஜித்.. வயனாடு மாவட்டம் அம்மனி பழங்குடியின மக்கள் வசிக்கும் காலனியை சேர்ந்தவர். தார்ப்பாயால் மூடப்பட்ட குடிசை வீடு.. அந்த வீட்டிற்குள் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் என ஐந்து பேர் வாழும் ஏழை மாளிகை. தொலைக்காட்சியோ, ரேடியோவோ அல்லது மொபைல் ஃபோனோ கூட கிடையாது. ஒரு வேளை உணவுக்கு கூட கூலி வேலையை நம்பி வாழும் குடும்பம். இப்படிப்பட்ட சூழலில் பிறந்து வாழ்ந்து வரும் அபிஜித்.. தனக்குள் ஒரு இசை ஞானம் இருக்கிறது என்பதை கூட அறிந்துகொள்ளாமல் தாளம் தட்டி இசையமைக்கிறார் தனது பள்ளி ஆசிரியரின் பாடல் வரிகளுக்கு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே அபிஜித்தின் வீடு தேடி சென்றது அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துகள்.
இதனை தொடர்ந்து ஈடிவி பாரத் அபிஜித்தின் வீட்டை தேடி பழங்குடி மக்கள் வாழும் அந்த அம்மனி காலனிக்கு சென்றது. மழலை சிரிப்போடு வரவேற்ற அபிஜித் தனக்கு கிடைத்த வாழ்த்துகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் ஆழமும் அவருக்கு புரியவில்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பாக வாழ ஒரு வீடு வேண்டும் என்ற கோரிக்கையை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பகிர்ந்துகொண்டார். அவருக்கு வாழ்த்து கூறி விடைபெறும்போது அவரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை நமக்குள்ளும் ஏற்பட்டது. இது ஒருபக்கம் இருக்க அந்த வீட்டில் தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் அபிஜித் தாளம் தட்டி பாடலுக்கு மெட்டமைத்தார்.
சேற்றிலும் பூக்கும் செந்தாமரை என்ற வரிகளை கேட்டதுண்டு..அபிஜித்தை பார்த்தபோதுதான் அதன் உண்மை தன்மையை உணர முடிந்தது. இசை குறித்து கற்றதும் இல்லை, கேட்டதும் இல்லை ஆனால் பாடலுக்கு ஏற்றார்போல் தாளம் தட்டும் ஞானம் எங்கிருந்து வந்தது அந்த சிறுவனுக்கு என்ற ஆச்சரியமே நம்மை இசை ஞானிவரை யோசிக்க வைத்தது. வரும் காலத்தில் அபிஜித் இசை கலைஞனாக வேண்டும் என்ற வாழ்த்துகளே அவரின் ரசிகராக மாறிய ஒவ்வொருவரின் ஆசையும்.
இதையும் படிங்க: Yamuna river: அபாய கட்டத்தை தாண்டி பாயும் யமுனை!