திருச்சூர்(கேரளா): கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள இந்து கோயிலில், திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சியில் பங்கேற்க, இஸ்லாமியப் பரதக் கலைஞரான மான்சியா பதிவு செய்துள்ளார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் நாட்டியக்கலைஞர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில், மான்சியா இஸ்லாமியர் என்பதால் கோயிலில் நடைபெறும் நாட்டிய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மான்சியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மான்சியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ள போதும், கோயில் நிர்வாகம் தன்னை அனுமதிக்காதது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளர்கள் கோயில் நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ''கலைநிகழ்ச்சி நடைபெறும் மேடையானது கோயில் வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வருவதால், கோயிலின் விதிமுறைப்படி இந்து அல்லாதவர்களை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பான விளம்பரத்தில் "இந்து மதத்தைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதி" வழங்கப்படும் என்றும்'' தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் விளக்கமளித்தனர்.
அதேநேரம், இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டியக் கலைஞருக்கு அனுமதி வழங்காத கோயில் நிர்வாகத்துக்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கலையையும், கலைஞர்களையும் சாதி, மத ரீதியில் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 1 ரூபாய் நாணயங்கள் கொடுத்து ரூ.2.6 லட்சம் பைக் வாங்கிய இளைஞர்!