திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள ஃபெரோக் என்ற பகுதியில் நேற்று (ஆக. 29) மதியம் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில், கோயமான் (66) என்பவரை இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்தடைந்த பின்னர், விபத்தில் காயமடைந்த கோயமானை சிகிச்சை அறைக்கு எடுத்துச்செல்ல மருத்துவப்பணியாளர்கள் ஆம்புலன்ஸ் வேனை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த கதவை அவர்களால் திறக்க முடியவில்லை.
அரைமணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், பணியாளர்களும் கதவைத் திறக்க கடுமையாக முயற்சித்தும் அதைத் திறக்க முடியவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் ஜன்னலை உடைத்து உள்புறமாக அந்த கதவை திறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விபத்தில் காயமடைந்த கோயமான் ஆம்புலன்ஸ் வேனின் உள்ளேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனையில் இருந்து இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று மருத்துவக் கல்லூரி போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உத்தரகாண்ட்டில் விஷவாயு கசிந்ததில் 25 பேர் மயக்கம்