திருவனந்தபுரம்: இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கேரள மாநிலம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், கேரள ஜனபக்ஷம் (மதச்சார்பற்ற) கட்சி தலைவர் பி.சி.ஜார்ஜ்யை காவல்துறையினர் இன்று (மே1) கைது செய்தனர்.
அனந்தபுரியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்ற இந்து மகா சம்மேளனத்தின் நிகழ்ச்சியில் பி.சி.ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "கேரளாவில் உள்ள இஸ்லாமியர் அல்லாதவர்கள், அந்த சமூகத்தினர் நடத்தும் உணவகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். திருவனந்தபுரத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் நடத்தும் மாலிற்கு இந்துக்கள் செல்ல வேண்டாம்" என்று பேசினார். இது அம்மாநிலத்தில் சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பி.சி.ஜார்ஜுக்கு எதிராக புகார் தெரிவித்தனர்.
கேரள மாநில இளைஞர் அமைப்பு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, பாப்புலர் பிரண்ட் ஆகிய அமைப்புகள் பி.சி.ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் கொடுத்தனர். வகுப்புவாத மோதலை தூண்டும் வகையில் பேசிய பி.சி.ஜார்ஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில், முஸ்லிம் யூத் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஹமீது வாணியம்பலம் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் டிஜிபி அனில் காந்த்தின் உத்தரவின் பேரில் திருவனந்தபுரம் கோட்டை காவல்துறையினர் பி.சி.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்து இன்று காலை 5 மணியளவில் ஈரட்டுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இந்தநிலையில், தற்போது மாவட்ட நீதிமன்றம் பி.சி.ஜார்ஜுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. வகுப்புவாத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்ட பி.சி.ஜார்ஜுக்கு தற்போது நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: கேரளா விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் கடத்திய தம்பதியினர் கைது!