சிக்கபல்லாபுர் (கர்நாடகம்): அவசர காலங்களின் மருந்துகளை ட்ரோன்கள் மூலம் உடனடியாக டெலிவரி செய்ய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் (டிஏஎஸ்) தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, பியாண்ட் விஷுவல் லைன் ஆஃப் சைட் (பி.வி.எல்.ஓ.எஸ்) எனும் மருத்துவ ட்ரோன் திட்டத்தை தொடங்கி ட்ரோன்களை சோதனைக்கு உள்படுத்துகிறது. ’மெட்காப்டர்' என இந்த ட்ரோன்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) இந்தத் திட்டத்திற்கு மார்ச் 2020இல் ஒப்புதல் அளித்தது. டிஏஎஸ் தவிர, ஹனிவெல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பாதுகாப்பு நிபுணத்துவத்தை இந்தத் திட்டத்திற்கு வழங்கி வருகிறது.
சோதனைகளில் இரண்டு வகையான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ராண்டிண்ட் (RANDINT) என்ற டெலிவரி மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
"மெட்காப்டர் சிறிய ரக ட்ரோன் ஒரு கிலோ வரை எடையை தாங்கி, 15 கி.மீ வரை சுமந்து செல்லக்கூடியது. மற்றொரு பெரிய ரகம் இரண்டு கிலோ எடையை தாங்கி 14 கி.மீ வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது" என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.