பெங்களூரு: கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சேத்தன் குமார். இவர் “சேத்தன் குமார் அஹிம்சா'' என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தனது டிவிட்டர் பதிவில், "சாவர்க்கரின் பொய்களால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராமர் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்தி திரும்பியதும் இந்தியா பிறந்தது என கூறியது பொய். 1992: பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம் என கூறுவதும் பொய்.
2023: திப்புவை கொன்றது ஊரி கெளடா - நஞ்சேகெளடா என்பதும் பொய். பொய்யான இந்துத்துவத்தை உண்மையால் வீழ்த்த முடியும். உண்மை அனைவருக்கும் பொதுவானது" எனக் கூறியிருந்தார்.
சேத்தனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக, சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் புகார் அளித்தார். இந்து மத உணர்வுகளை புண்படுத்திய நடிகர் சேத்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் சேத்தன் குமாரை கைது செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சேத்தன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகாவை பூர்வீகமாகக்கொண்ட சேத்தன் குமார், அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு வெளியான Aa Dinagalu படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகன் விருதை (உதயா திரைப்பட விருது) தட்டிச்சென்றார். அதன்பிறகு 2013ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமூகம் சார்ந்த செயல்களில் ஆர்வம் செலுத்தி வரும் சேத்தன், பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வருகிறார்.
நடப்பு அரசியல் நிகழ்வுகள், சமூகம் சார்ந்த பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவது சேத்தனின் வழக்கம். அந்த வகையில் தற்போது இந்து மதம் குறித்து அவர் பதிவிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஸ்வரூபம் எடுத்த போது, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சேத்தனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த பிரதமர் அறிவுறுத்தல்