பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியைச் சேர்ந்த மருத்துவரும், வழக்கறிஞருமான டாக்டர்.வினோத் ஜி குல்கர்னி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 10 ஆண்டுகளாக நீட் முதுகலை தகுதித் தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 50 சதவீதமாக இருந்தது.
ஆனால், 2023ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை பூஜ்ஜியமாக குறைத்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருத்துவ ஆலோசனைக் குழுவானது செப்டம்பர் 20, 2023 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஆகவே நீட் முதுகலைத் தேர்வில் பூஜ்ஜியம் கட்-ஆஃப் எடுத்த ஒவ்வொருவரும் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடத்தை பெறலாம். இதனால் நாடு, மருத்துவர்களை உருவாக்கும் களஞ்சியமாக இல்லாமல், கிடங்காக மாறும் சூழ்நிலை உண்டாகும். மேலும், நீட் முதுகலை கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாகக் குறைப்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் லாப நோக்கத்தை எளிதாக்கும்.
முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தகுதி மட்டுமே அளவுகோலாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. எனவே, நீட் முதுகலை தகுதித் தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்களை பூஜ்ஜியமாகக் குறைத்து, 2023 செப்டம்பர் 20 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும். மேலும், முந்தைய 50 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி பிரசன்னா பாலசந்திர வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருத்துவ ஆலோசனைக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரவாயலில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை.. போலீசார் தனிப்படை அமைத்து தேடல்!