கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த வழக்கு விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அஸ்வதி, நீதிபதி கிருஷ்ணா, நீதிபதி ஜேஎம் காசி ஆகியோரின் அமர்வு கடந்த 11 நாள்களாக வழக்கை விசாரித்துவருகிறது.
மொத்தம் ஒன்பது ரிட் மனுக்களையும், 35 இடைக்கால மனுக்களையும் விசாரித்து முடித்துள்ள நீதிமன்றம் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்துள்ள நிலையில், அரசின் உத்தரவைக்காட்டி அவர்களுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது.
கல்வி நிலையங்களில் சீருடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிராக இந்து அமைப்புகளும், மாணவர்களும் பதில் போராட்டம் நடத்திய நிலையில், மாநில அளவிலான சட்டம் ஒழுங்கு பிரச்னையாக இது உருவெடுத்தது.
இந்நிலையில், விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இரு தரப்பும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 27 நாட்டு தலைவர்களிடம் கேட்டேன்; எல்லாரும் அச்சப்படுகிறார்கள் - உக்ரைன் அதிபர் உருக்கமான உரை