கரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் வீரியத்துடன் பரவிவரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, பொதுமுடக்கம் அறிவித்து கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நேற்று (ஏப்ரல் 20) அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கர்நாடகாவில் இன்றுமுதல் (ஏப்ரல் 21) மே மாதம் 4ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அமலுக்குவருகிறது. இந்த ஊரடங்கு இரவு 9 மணி தொடங்கி காலை 6 மணிவரை நடைபெறுகிறது.
ஊரடங்கின்போது, அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இரவு 9 மணிக்கு மூடப்பட வேண்டும், இதில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு.
மேலும், அனைத்துக் கல்வி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் ஆகியவையும் மூடப்படும். விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு மட்டுமே நீச்சல் குளங்கள் திறந்திருக்கும்.
கோவிட் பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடைப்பிடித்துவருகின்றன. டெல்லி அரசு யூனியன் பிரதேசத்தில் ஆறு நாள் பொதுமுடக்கத்தை கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 19) முதல் அமல்படுத்தி செயல்படுத்திவருகிறது.