லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், நாக்கை துண்டித்து, கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயற்சித்தனர். அப்பகுதியில் உயர் சாதியாக கருதப்படும் தாகூர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் காப்பாற்ற முயற்சித்ததாக ஹத்ராஸ் மக்கள் குற்றம்சாட்டினர். 6 நாட்களுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். உச்சகட்டமாக, அப்பெண் உடலை போலீசார் ரகசியமாக நள்ளிரவில் தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் ஹத்ராசை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால் ஹத்ராஸ்-க்கு சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட பலரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில் ஹத்ராஸுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பன் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததாகவும், பண மோசடி செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சித்திக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த சித்திக்கிற்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃஉபா வழக்கில் லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் பண மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சித்திக் காப்பன் இன்று(பிப்.2) லக்னோ நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சித்திக், "பல போராட்டங்களைக் கடந்து 28 மாதங்களுக்கு பின்னர் நான் சிறையில் இருந்து வெளியே வருகிறேன். வங்கிக்கணக்கில் ஐந்தாயிரம் கூட இல்லாத என் மீது பண மோசடி வழக்குப் போட்டனர். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பொய் வழக்குப் போடப்பட்டது. என்னிடம் ஒரு செல்போன், இரண்டு பேனாக்கள், ஒரு நோட்பேட் மட்டுமே இருந்தது. இப்போது வெளியே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஆதரவு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி" என்றார்.
இதையும் படிங்க:"ராம் ராம் சொல்லு" நாய்க்கு பயிற்சி அளித்த பாஜக எம்எல்ஏ வீடியோ!