பிகாரைச் சேர்ந்த இளம் தலைவரான கனையா குமார் நேற்று(செப் 28) ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு தலைவராக இருந்த இவர், பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் கனையா குமார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயலாற்றிவந்த அவர், தற்போது அங்கிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா கூறியதாவது, "கனையா குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லை. கனையா குமார் வருவதற்கு முன் நீண்ட காலமாகவே கட்சி உயிர்ப்புடன் இருந்துவந்துள்ளது. இன்னும் பல ஆண்டுகளுக்கும் கட்சி தழைத்திருக்கும்.
அவருக்கு சொந்த வளர்ச்சியில் அதீத ஈடுபாடு இருந்திருக்கும். எனவே கட்சி மாறியுள்ளார். அவருக்கு கம்யூனிச தத்துவத்தில் நம்பிக்கையில்லை என்பது இது காட்டுகிறது" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பண்டிகை காலம் வருது... உஷார் மக்களே! - அரசு எச்சரிக்கை