நாக்பூர்: மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் ரோஹித் தியோ. இவர் ஆகஸ்ட் 04ஆம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.ராஜினாமா செய்ததற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், தனது சுய மரியாதைக்கு எதிராக தன்னால் பணியாற்ற முடியாது என அவர் குறிப்பிட்டதாக நீதிமன்ற அறையில் இருந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக ரோஹித் தியோ பதவி வகித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம், மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட ரோஹித் தியோ, கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
2025-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெறவுள்ள நீதிபதி ரோஹித் தியோ, பல்வேறு முக்கிய வழக்குகளில் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, குற்றம் சாட்டப்பட்டிருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையும் படிங்க: Gyanvapi mosque case: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதி ரோஹித் தியோ விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
அதேபோல், நாக்பூர் - மும்பை சம்ருதி விரைவு சாலை பணிகளின் போது, ஒப்பந்ததாரர்கள் சட்டவிரோதமாக, அப்பகுதியில் இருந்த கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக, வருவாய்த் துறையினர் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை செயல்படுத்த தடை விதித்து நீதிபதி ரோஹித் தியோ உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் ஒரு வழக்கு விசாரணையின் போது, "நான் வழக்கறிஞர்களிடம் கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளேன், நான் கூறிய வார்த்தைகள், அனைத்தும் நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக தான், அத்தகைய வார்த்தைகள், தங்களை காயப்படுத்தி இருந்தால், தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று உருக்கமாக பேசிவிட்டு தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.