ராஞ்சி (ஜார்க்கண்ட்): நேற்றைய முன்தினம், மதுபான ஊழல் மற்றும் தியோகர் நில மோசடி தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் 32 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. குறிப்பாக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஹர்மு, தும்பா மற்றும் தியோகர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக, பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய மூன்றாம் நாட்களுக்குப் பிறகு அமலாக்கத்துறை தனது சோதனையைத் தொடங்கி இருந்தது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இது, இந்த மாதத்தில் மட்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அனுப்பப்படும் இரண்டாவது சம்மன் ஆகும். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் பல திட்டங்கள் முதலமைச்சருக்கு இருப்பதாகக் கூறி ஆஜாரக முடியாது என அமலாக்கத் துறைக்கு ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில், இன்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் செல்லவில்லை.
இந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் சின்ஹா மத்திய அரசை கடுமையாக சாடி இருந்தார்.
இது குறித்து பேசிய ராகேஷ் சின்ஹா, “அமலாக்கத்துறை இனி சுதந்திரமாக செயல்படும் அமைப்பு அல்ல. ஆனால், அமித்ஷாவின் நிர்வாக அமைப்பு. நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம். எனவே, நாங்கள் இப்போது நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறோம். இது மட்டுமே எங்களுக்கு உள்ள ஒரே வழி.
நேற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் மற்றும் ஓஎஸ்டி ஆகியோரது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது பிரதமர் மற்றும் பாஜக கவலையில் இருப்பதைக் காட்டுகிறது. மத்திய அரசு, அமலாக்கத்துறையை தனது சொந்த அலுவல்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது” என தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: Jharkhand ED Raid: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 32 இடங்களில் ED சோதனை!