ஹைதராபாத்: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த அட்லீயின் முதல் பாலிவுட் படமாக சமீபத்தில் கடந்த செப். 7ஆம் தேதி 'ஜவான்' உலகம் முழுவதும் வெளியானது. பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றிய அட்லீ, அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று தான் செல்லவேண்டும்.
'ஜவான்' பான் இந்திய படமாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்திலும், வில்லனாக விஜய் சேதுபதியும், தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருந்தனர்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக 'பதான்' படம் வெளியானது. உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது இப்படம். இந்தியாவில் மட்டும் மொத்தமாக ரூ.540.51 கோடி வசூல் செய்தது. ஆனால் ஜவான் திரைப்படம் 17 நாட்களில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 544.98 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது, பதான் திரைப்படத்தைப் போலவே, 'ஜவான்' திரைப்படமும் ரூ.1000 கோடியை தாண்டி வசூல் சாதனை புரியும் என்று பாலிவுட் வட்டாரங்களும், ஷாருக்கான் ரசிகர்களும் வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள். அப்படி நடந்தால் ஒரே ஆண்டில் பதான், ஜவான் படங்களின் மூலம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெறுவார் ஷாருக்கான்.
4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல், தன்னுடைய ரசிகர்களை தவிக்க விட்ட ஷாருக்கான், இந்த ஆண்டிலேயே 'பதான்' படத்தைத் தொடர்ந்து 'ஜவான்' என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அட்லீயின் முதல் பாலிவுட் படமே இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.
இதனையடுத்து அல்லு அர்ஜுனை வைத்து அவர் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய், ஷாருக்கானை வைத்து படம் இயக்க ஆசை இருப்பதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். இதனால் அவரின் அடுத்த பட அறிவிப்பிற்காக ரசிகர்கள் இடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: Dhruva Natchathiram: 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! விக்ரமின் ஸ்டைலிஷ் காட்சிகள் வெளியீடு..