டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில், ஹனுமன் ஜெயந்தியையொட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதில் 8 போலீசார் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். குறிப்பாக துணை காவல் ஆய்வாளருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜஹாங்கிர்புரி வன்முறை வழக்கில் மேலும் 5 பேரையும், ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், 2 சிறார்கள் உள்பட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுகேன் சர்கார் என்பவரது குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய சுகேன் சர்காரின் மனைவி துர்கா, "இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தங்களது சமூகத்தினர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தனது குடும்பத்தில் உள்ள ஆண்களை மட்டும் கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தனது குடும்பத்தினர் கலவரத்தை தொடங்கவில்லை என்றும், அவர்கள் அப்பாவிகள் என்றும் குறிப்பிட்டார்.
தனது 12-ம் வகுப்பு படிக்கும் மகனையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும், பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில் மகனை வெளியே விடாவிட்டால், அவனது மொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்றும் வேதனையுடன் தெரிவித்தார். இந்த சம்பவத்திலும், போலீசாரின் நடவடிக்கையிலும் சதி இருக்கிறது" என்றும் குறிப்பிட்டார். இதேபோல் கைது செய்யப்பட்ட பலரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும், போலீசார் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.