புதுச்சேரி: கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (ஆகஸ்ட்.27) புதுச்சேரி பட்ஜெட் மீது கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "கடந்த ஐந்து ஆண்டு காலம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் ஆண்டுதோறும், இடைக்கால பட்ஜெட்டை சமர்பித்து, மக்களை ஏமாற்றிய திமுகவும் காங்கிரஸும் தற்போது இந்த சிறப்புமிக்க பட்ஜெட்டை குறைகூறுவது ஏற்புடையதல்ல.
கடந்த ஆட்சியில், நிதி ஆதாரத்தைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பட்டியல், பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, திருமண உதவித்தொகை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு அதிக நிதி
காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் உதவித்தொகை இரண்டு லட்ச ரூபாயிலிருந்து 3.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முழுமையாக மூடப்பட்ட ரேஷன் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்து, உணவுப் பொருள்களை குறைந்த விலையில் விநியோகிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுட்
கல்வித்துறையை செம்மைப்படுத்த இந்த பட்ஜெட்டில் 742 கோடி ரூபாயும், இலவச அரிசிக்காக சுமார் 197 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து மாதந்தோறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில்,் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கு 40 கோடி ரூபாய், பால் உற்பத்தியைப் பெருக்க 44 கோடி ரூபாய், சுகாதாரத்துறைக்கு 795 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது. உப்பளத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உப்பனாறு கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தன்னாட்சி அதிகாரம்
கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் இழுத்து மூடப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்களுக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் மீண்டும் செயல்பட தன்னாட்சி, பொதுத்துறை கூட்டுறவு நிறுவனங்களுக்கு சுமார் 1,243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதிகப்படியான நிதியை புதுச்சேரிக்கு பெற்று வந்தது பாராட்டுக்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்காத மக்களும் ஏன் நாம் வாக்களிக்கவில்லை என வருத்தப்படக்கூடிய நிலையில், இந்த பட்ஜெட் சிறப்பாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரி வளர்ச்சிக்கு தமிழிசை உறுதுணையாக உள்ளார்' - முதலமைச்சர் ரங்கசாமி