பெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்கலம் திட்டமிட்டபடி தரையிரங்காமல், லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மோதி உடைந்தது. அதேநேரம் விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது.
சந்திராயன்2 திட்டத்திலிருந்து கிடைத்த அனுபவங்களை வைத்து, அடுத்தகட்டமாக சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. விண்கலத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து, மிகவும் வலிமையானதாக சந்திராயன்-3 உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்குள் சந்திராயன்-3 விண்ணில் ஏவப்படும் என தகவல் வெளியானது.
அதைத்தொடர்ந்து சந்திராயன்3- ன் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அண்மையில் தெரிவித்தது. பெங்களூருவில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சந்திரயான்-3 EMI - EMC சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகவும், இந்த சோதனை கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சந்திராயன்-3 திட்டத்தின் இரண்டாம் கட்ட சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ நேற்று(பிப்.27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சிஇ-20 கிரையோஜெனிக் எஞ்சினின் விமான ஏற்பு வெப்ப சோதனை கடந்த 24ஆம் தேதி தமிழ்நாட்டில், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுக்கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்