திருவனந்தபுரம்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நிலையில், அந்தவரிசையில் இந்தியாவும் இடம்பெற மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்குத் திட்டமிட்டது இஸ்ரோ. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்1 திட்டத்தைச் செயல்படுத்தியது. அதைத்தொடர்ந்து தொடர்ந்து தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது இஸ்ரோ.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து நேற்று (அக்.21) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட மாதிரி விண்கலம் பாராசூட் மூலம் கடலில் இறங்கியதையடுத்து இந்திய கடற்படையினர் அதனை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதுகுறித்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் சோமநாத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ககன்யான் மாதிரி விண்கலம் நேற்று (அக்.21) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகளவில் எதிர்பார்க்கப்படும் ககன்யான் விண்கலத்தில் சோதனைக்காக பெண்மனித ரோபோவை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
பூமியிலிருந்து 400கி.மீ., தூர சுற்று வட்டப் பாதைக்கு விண்கலம் 3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் வரை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின் பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் முதன்மைப் பணி. குறைந்த நாட்கள் மட்டுமே செயலாக்கம் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும். தற்போது தற்காலிக சோதனைக்கு விமானப்படை வீரர்களுக்கு அனுபவங்கள் இருப்பதனால் அடுத்தாண்டு நிகழவிருக்கும் சோதனைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரையில், பெண்கள் யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில், இத்திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டால், அதிக அறிவியல் செயல்பாடு இருக்கும். அப்படியானால், விண்வெளிக்கு அனுப்பப்படும் விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களாக உருவாக்கப்படுவார்கள். அதனால் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்புகிறேன். ஆனால், தற்போது பெண்கள் போர் விமான ஓட்டிகள் இல்லாததால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. மேலும் 2035-க்குள் அனைத்து திறன்களும் கொண்டு செயல்படும் விண்வெளி மையமாக அமைப்பதே இஸ்ரோவின் இலக்கு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி! கால தாமதத்திற்கு காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் விளக்கம்!