புதுச்சேரி: உலக கரலாக்கட்டை நாளை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் ஒருவர் 7.200 கிலோ கரலாக்கட்டையை 30 நிமிடத்தில் ஆயிரத்து 304 முறை சுழற்றி சாதனை படைத்துள்ளார். இதேபோல் மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் ஆயிரத்து 82 முறை கரலாக்கட்டையைச் சுழற்றி உலக சாதனை நிகழ்த்தினார்.
பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்திடும் குருகுலம்
பூரணங்குப்பம் பகுதியில் ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலம் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்குப் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் சிலம்பம், போர் சிலம்பம், குஸ்தி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, மல்யுத்தம், வர்மக்கலை, தரைப்பாடம், உடற்கட்டு பாடம் ஆகிய பாரம்பரிய கலைகளைப் பயிற்றுவித்துவருகின்றது.
மேலும், ஆண்டுதோறும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்திடும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
உலக சாதனை நிகழ்ச்சி
அதன் ஒரு பகுதியாக நேற்று டிசம்பர் 12ஆம் தேதி பூரணங்குப்பத்தில், உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைப் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தொடங்கிவைத்தார்.
இதில் மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற பெண் 2.600 கிலோ எடை கொண்ட கரலாக்கட்டையை இடுப்புச்சுற்று என்ற முறையில் 30 நிமிடங்களில் 1082 முறை சுழற்றி உலக சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து, ஹரிஹரன் கெண்டைக்கால் சுற்று என்ற முறையில் 30 நிமிடங்களில் ஆயிரத்து 360 முறை சுழற்றி உலக சாதனை படைத்தார்.
நமச்சிவாயம் வாழ்த்து
இதேபோன்று சிலம்பாட்ட குருகுல நிறுவனர் கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன், உடும்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடங்களில் ஆயிரத்து 304 முறை சுழற்றி உலக சாதனை படைத்தார்.
அதன்பின், ஐந்து பேர் உலக சாதனை நிகழ்ச்சியில் அனைவரும் ஆவலுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: 'மார்கழியில் மக்களிசை 2021': கலந்து கொள்ளும் திரைப்பிரபலங்கள்