ஒடிசா மாநிலம் மகிதர்பூர் அருகே கடந்த பிப் 28ஆம் தேதி இரவு சாலை ஓரம் ஒரு தண்ணீர் லாரி நின்றுகொண்டிருந்தது. இதனைக் கண்ட தேன்கனிக்கோட்டை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, லாரியை சோதனை செய்தபோது அதில், 9 ஆயிரத்து 224.8 லிட்டர் மதுபானம் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக இதனை மீட்ட போதை தடுப்புப் பிரிவு அலுவலர்கள், இது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், ஹரியானாவைச் சேர்ந்த பிஜேந்திரா, சதீஷ் நந்தல், அபினாஷ் மொஹரானா ஆகியோரைக் கைது செய்தனர். இதனையடுத்து காவல் துறையின் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 11 நாள்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து நேற்று (மார்ச் 13) காலை, அதிகாரிகள் குழு புவனேஸ்வரின் புறநகரிலுள்ள நுகானில் நான்கு மாடி கட்டடத்தை சோதனை செய்து, டேங்கரில் மதுபானம் கடத்திய வழக்கில் தொடர்புடையதாக ராஜ் குமாரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், தான் ‘புஷ்பா’ திரைப்படத்தை பார்த்து நூதன முறையில் மதுக் கடத்தலை மேற்கொண்டதாக வாக்குமூலம் அளித்தார். ராஜ் குமாரின் ஸ்மார்ட்போனில் ‘புஷ்பா’ திரைப்படத்தின் பல சிறிய காட்சிகள் காணப்பட்டன, இது அவரது கூற்றை உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: காவலர்களை கண்டு தப்பியோடிய ரவுடிகள் - போலீஸ் விசாரணை