கர்நாடக மாநிலம் பாகல்கோட் நகரை சேர்ந்த அமீர் சொஹைல் என்ற இளைஞர் பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்டு புதிய அவதாரம் எடுத்துள்ளார். இன்ஜினியாரான இவர், படிப்பை முடித்ததும் ஜப்பானைச் சேர்ந்த மல்டி நேஷ்னல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
ஆனால் சில காலம் மட்டுமே நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், திடீரென வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஊருக்கு திரும்பிய கையோடு புதிய டீ கடை ஒன்றையும் திறந்துள்ளார்.
உற்றார், உறவினர் இவரின் செயலைப் பார்த்து அதிர்ச்சியுடன் காரணத்தை கேட்டால், தனது முடிவுக்கு காரணம் பிரதமர் மோடிதான் என்று தெரிவித்துள்ளார். ஆம், பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்டு தான் தான் டீ கடையை திறந்துள்ளேன் என்கிறார் சொஹைல்.
டீ விற்ற ஒருவர் நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளபோது, இன்ஜினியர் ஒருவர் ஏன் டீ விற்க கூடாது என்கிறார் சொஹைல். "ஒரு இன்ஜினியரின் டீ கடை" தனது கடைக்கு பெயர் வைத்துள்ள இவர், டீயுடன் சேர்த்து, பிஸ்கட், கேக், பன் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறார்.
நாள்தோறும் ஆயிரம் கப் டீ விற்பனையாகும் என்று கூறும் இவர், கோவிட் தொற்று காரணமாக வியாபாரம் பாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார். இன்னும் சில மாதங்களில் தனது வியாபாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?