உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சர்பாக் ரயில் நிலையத்திற்கு வெளியே ரேகா என்ற பெண் ஒரு சிறிய சிலிண்டரில் குழந்தைகளுக்கு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் அங்கிருந்து கிளம்பும்படி ரேகாவிடம் கூறினார். ஆனால், உணவு அடுப்பில் இருப்பதால் சிறிது நேரம் ஆகும் என அப்பெண் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் உணவை எட்டி உதைத்தார். மேலும் சமைத்துக்கொண்டிருந்த உணவு பெண் மீதும், குழந்தைகள் மீதும் பட்டதால் அவர்கள் காயமடைந்தனர்.
கிடைத்த தகவல்களின்படி, இந்த ஏழைக் குடும்பம் சர்பாக் ரயில் நிலையத்தில் கட்டப்பட்ட கழிவறைக்கு அருகில் வசிக்கிறது. இறந்த உடல்களை தூக்கும் பணியை இவர்கள் செய்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு அருகிலுள்ள நடைபாதையில் ஒரு இடம் வழங்கப்பட்டது.
ஆனாலும், அவர்கள் மீது காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியது விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், சிறிது நேரத்தில் கிளம்புகிறோம் என்று கூறியும் ஆய்வாளர் ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.