டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மின்னணு வர்த்தகம் ஆகியவற்றில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை (பிப்.26) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒடிசா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பாரத் பந்த் குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவி பணவீக்கம் உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் கண்களை மூடிக்கொண்டு கவலையின்றி காணப்படுகிறது. ஆகவேதான் பாரத் பந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்வை கண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீனவர்களுடன் மீனவராக மாறிய ராகுல் காந்தி!