இந்திய பார்மா மற்றும் மருத்துவ உபகரணங்கள் 2021இன் ஆறாவது பதிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. அதன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, 2030ஆம் ஆண்டுக்குள் 130 பில்லியன் டாலர்கள் மதிப்பில் மருந்துத்துறை வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நாட்டின் பிரதமராக மோடி வந்த பிறகுதான், கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை நாட்டு மக்கள் கண்டனர். எளிதான முறையில் வர்த்தகத்தை மேற்கொள்வது சாத்தியமானது. மற்ற நாடுகளுடனான ராஜாங்க ரீதியான உறவு மற்றும் வர்த்தக கொள்கை பலப்படுத்தப்பட்டது.
2019-20 ஆண்டு, வெளிநாடுகள் மருந்துத்துறையில் 3,650 கோடி ரூபாய் முதலீடு செய்தன. வெளிநாட்டு மூலதனம் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், வெளிநாட்டு முதலீடு 98 விழுக்காடு அதிகரித்தது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு மருந்து தொழிற்சாலைகளை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டன" என்றார்.