பெங்களூரு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை கோலகலமாக தொடங்க உள்ளது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி காணப்படுகிறது. இந்த தொடரில் வெற்றி வாகை சூடும் அணி, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
நாளை (ஆகஸ்ட். 30) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் களம் காணுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய கே.எல்.ராகுல் அதன் பின் எந்த தொடர்களிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வாகி உள்ளார். இருப்பினும், காயத்தில் இருந்து கே.எல். ராகுல் முழுமையாக குணமடையாததால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அவர் விளையாடுவது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், காயத்தில் இருந்து பூரண குணமடையாத கே.எல்.ராகுல், பெங்களூரு தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், செப்டம்பர் 4ஆம் தேதி கே.எல். ராகுலுக்கு தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிய கோப்பை போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை கே.எல்.ராகுல் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Rajinikanth: பஸ் கண்டெக்டராக வேலை செய்த இடத்திற்கு சென்ற ரஜினிகாந்த்.. நினைவுகளை பகிர்ந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி!