இம்பால்: மணிப்பூரில் மெய்டீஸ் (Meiteis) சமூகத்தினர் 53 சதவீதம் பேர் உள்ளனர். தங்களை பழங்குடினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என இவர்கள் நீண்ட நாட்களாக சட்டப்போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்புமாறு, மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெய்டீஸ் சமூகத்தினரின் கோரிக்கைக்கு எம்.பி., எம்.எல்.ஏ., பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மெய்டீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு, குக்கி, சோமி உள்ளிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் விரும்பவில்லை. இதனால் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மணிப்பூரின் பெரும்பான்மை மக்களான மெய்டீஸ் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பாஜக அரசு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மெய்டீஸ் சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க கூடாது எனவும் வலியுறுத்தி மே.3-ஆம் தேதி அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ATSU) சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’ நடத்தப்பட்டது.
சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தர்பங் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பழங்குடி மக்களுக்கு பழங்குடி அல்லாதோருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்த தகவல் அண்டை மாவட்டங்களுக்கும் பரவி அங்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் மெய்டீஸ் சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது.
கலவரத்தில் வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், அருகில் உள்ள பல மாவட்டங்களிலும் கலவரம் பரவியது. இதனால் ஏராளமானோர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. தர்பங் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வன்முறை நீடித்தது.
மாநில போலீஸாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.
மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பாதுகாப்புக்காக ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த கோரி பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
கலவரம் நடைபெற்ற பகுதிகளில் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டில் வைக்க ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் சுராசந்த்பூர், இம்பால், கேபிஐ ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையத் தவிர்க்க மேலும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட உள்ளதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, மணிப்பூரில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவரச கூட்டத்தை நடத்தினார். முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், மாணவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பு கொள்வதற்கு ஹெல்ப்லைன் உருவாக்கப்பட உள்ளதாகவும் சங்மா தெரிவித்துள்ளார்.
மேலும் கலவரத்தை பயன்படுத்து சமூக விரோத சக்திகள் போலி வீடியோக்களை பரப்பி வருவதாகவும், அதுபோன்ற போலியான வீடியோக்களை பகிர்வதைத் தடுக்க வேண்டும் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த கலவரம் அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் நிலைமையை கட்டுக்குள் வைத்து இயல்புநிலை திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த கலவத்திம் மணிப்பூர் - மியான்மர் எல்லையில் பர்மிஸ் தமிழர்கள் வாழும் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: RN Ravi: திமுக அரசு மீது விஷத்தை கக்கும் ஆளுநர்: கே.எஸ்.அழகிரி விளாசல்!