டெல்லி: மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (பிப். 10) அணுமின் உற்பத்தி குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப்பின் நாட்டில் அணுமின் உற்பத்தி கனிசமாக உயர்வை கண்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டில் அணுமின் உற்பத்தி 35,333 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டில் 47,112 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் 8 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி 30 முதல் 40 சதவீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாட்டில் 22 அணு உலைகள் மட்டுமே இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் மொத்தமாக 11 அழுத்தமிகு கனநீர் அணு உலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த உலைகளின் மதிப்பு ரூ.1,05,000 கோடியாகும். இதன் உற்பத்தி திறன் 7,000 மெகா வாட்ஸ்களாகும். முன்பெல்லாம், அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் தென் மாநிலங்களிலோ அல்லது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே நிறுவப்பட்ட நிலையில், இந்த 11 நிலையங்கள் பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட உள்ளன.
அதில் ஹரியானா மாநிலம் கோரக்பூரும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், அணுமின் திட்டங்களை மேம்படுத்த பொதுத்துறை நிறுவனங்களுடன் (PSUs) கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக, யுரேனியம் 233 பயன்பாட்டில் தோரியம் அடிப்படையில் மின் உற்பத்தி செய்யப்படும், உலகின் முதல் அணுமின் நிலையம் பாவினி, தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்