டெல்லி: சீக்கியர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் கடந்த பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்புகளின் ஒன்றான வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்து பல்வேறு வித போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பின் தலைவரான அமிரித் பால் சிங் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி பஞ்சாப் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது அவர் தப்பித் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
அவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அம்ரித் பால் சிங்கிற்கு உதவியதாக பாட்டியாலாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ஜாக்கெட், கண்ணாடி, உள்ளிட்ட அணிந்து இருக்கும் அம்ரித் பால் சிங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து இந்தியா - நேபாளம் எல்லையில் பாதுகாப்பு சோதனையைப் பலப்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்ரித் பால் சிங் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளில் உள்ள காலிஸ்தான் அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவில் கடந்த வாரம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற இருந்த விழாவில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கலந்து கொள்ள இருந்த நிலையில், காலிஸ்தான் அமைப்பினரின் தீவிர போராட்டம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் அந்த விழா ரத்து செய்யப்பட்டது.
மேலும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய வம்சாவெளி பத்திரிக்கையாளர் சமீர் கவுசல் கடுமையாகத் தாக்கப்பட்டார். மேலும் அங்கிருந்த காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. முன்னதாக அங்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆகியவற்றை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த இரு சம்பவங்களுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் கனடாவில் இந்தியத் தூதரகம் மற்றும் தூதரக நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் பிரிவினைவாத அமைப்புகள் மீது நடவடிக்கை குறித்து கனடா தூதருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் வழங்கியது.
மேலும் போலீஸ் கண்காணிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு குளறுபடிகள் நடந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதரிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கோரியது.
இதையும் படிங்க: நடுவானில் ஏர் இந்தியா - நேபாள் ஏர்லைன்ஸ் மோதல் தவிர்ப்பு - நேபாள அதிகாரிகளிடம் டிஜிசிஏ முறையீடு!