மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் மும்பை-சோலாப்பூர் மற்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி வழித்தடங்களில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை இன்று (பிப். 10) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை-சாய்நகர் ரயில், சோலாப்பூரில் உள்ள சித்தேஷ்வர், அக்கல்கோட், துல்ஜாபூர், பந்தர்பூர் மற்றும் புனே அருகே உள்ள முக்கியமான புனித தலங்களுக்கு இடையேயான பயணித்தை அதிகரிக்கும் என்றும் மும்பை-சாய்நகர் ஷீரடி ரயில் நாசிக், திரிம்பகேஷ்வர், சாய்நகர் ஷிர்டி, ஷானி சிங்கனாபூர் போன்ற புனித தலங்களுக்கு எளிதாக பயணிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது பேசிய பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டில் பொதுப் போக்குவரத்து முறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்து அமைப்பை எவ்வளவு விரைவாக நவீனமாக மாற்றுகிறோமோ அவ்வளவு விரைவாக மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும். குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டுவரும்.
இந்தியா முழுவதும் நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மெட்ரோ சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. புதிய விமான நிலையங்களும், துறைமுகங்களும் நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் என்ற நோக்கில் கட்டப்பட்டுவருகின்றன. இதுபோன்ற உள்கட்டமைப்புகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகை கடந்த 9 ஆண்டுகளில் செலவழித்ததை விட 5 மடங்கு அதிகமாகும். காங்கிரஸ் தலைமையிலான அரசு நடுத்தர மக்களுக்கு வரி விதித்தது. ஆனால், பாஜக அரசு அவர்களுக்கு வரிவிலக்கு அளித்தது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, ரூ.2 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் நடுத்தர மக்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், பாஜக அரசு ரூ.5 லட்சம் வரையில் வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளித்தது. இந்த வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒருகாலத்தில் உத்தரப் பிரதேசம் ஊழல்களுக்கு பெயர்பெற்றது - பிரதமர் மோடி