டெல்லி : இந்தியக் கடற்படையில் மேம்பட்ட போர் விமானங்கள் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில், ரபேல் போர் விமானங்களின் தேர்வை மத்திய அரசு இன்று (ஜூலை 15) அறிவித்து உள்ளது.
பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலின்படி, இந்திய கடற்படையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 36 மேம்பட்ட போர் விமானங்களுடன், புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.
"இந்தியாவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு வெற்றிகரமான சோதனை நிகழ்விற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனை நிகழ்வின்போது, இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தது மற்றும் அதன் விமானம் தாங்கி கப்பலின் தனித்தன்மைக்கு மிகவும் பொருத்தமானது என்பதை ரஃபேல் போர் விமானங்கள் நிரூபித்துள்ளது" என டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
ரஃபேல் போர் விமானங்களின் சிறப்பையும், டசால்ட் ஏவியேஷன் மற்றும் இந்தியப் படைகளுக்கு இடையேயான இணைப்பின் எல்லையற்ற தரத்தையும், இந்தியாவிற்கும், பிரான்சிற்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த தேர்வு அமைந்து உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியாவின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (DAC), இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் கப்பற்படை விமானங்களை வாங்குவதற்கான தேவையை (AoN) நேற்றைய முன்தினம் (ஜூலை 13) ஏற்றுக் கொண்டது.
இதனையடுத்து, இதற்கான கூட்டத்தை நடத்திய பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில், Mazagon Dock Shipbuilders Limited (MDL) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மூன்று கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான தேவையை அறிவித்தது.
ரஃபேல் மரைன் விமானங்களுக்கான தேவையை ஏற்றுக்கொள்வது, அதனுடன் தொடர்புடைய துணை உபகரணங்கள், ஆயுதங்கள், சிமுலேட்டர், உதிரிப் பாகங்கள், ஆவணங்கள், குழு பயிற்சி மற்றும் இந்திய கடற்படைக்கான தளவாட உதவிகள் உள்ளிட்டவைகள் உடன் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து இரு நாட்டு அரசுகளின் அடிப்படையிலான ஒப்பந்தந்தின் (IGA) ஆதரவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில், இது போன்ற விமானங்களின் ஒப்பீட்டு கொள்முதல் விலை உள்பட அனைத்து தொடர்புடைய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு விலை மற்றும் பிற கொள்முதல் விதிமுறைகள் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்தியா வடிவமைத்த உபகரணங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கான பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் செயல்பாடுகள் (MRO) மையத்தை நிறுவுதல் ஆகியவை உரிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒப்பந்த ஆவணங்களில் இணைக்கப்படும்.
"முக்கியமான உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி மூலம் பாதுகாப்பு தளங்கள் மற்றும் உபகரணங்களின் வாழ்க்கை சுழற்சி ஆதாரங்களில் 'சுயசார்பு இந்தியா’ என்ற நிலையை அடைய உதவும்" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.