டெல்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலும் ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடக்கும் இடம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காஷ்மீர் மற்றும் அருணாசல பிரதேசத்திற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடப்பது இரு நாடுகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு இணையானது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிடும் எனக் கூறப்படுகிறது. ஜி20 கூட்டத்திற்கான நடப்பு அட்டவணையை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 7) வெளியிட்டது. இதில் ஜி20 மாநாட்டின் சுற்றுலா தொடர்பான கூட்டம் மே 22 முதல் 24 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாத இறுதியில் அருணாசல பிரதேச தலைநகரில் இடா நகரில் மத்திய அரசு 2 நாட்கள் ஜி20 மாநாட்டை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா இந்த மாநாட்டை புறக்கணித்தது. அதேபோல் ஸ்ரீநகரில் நடைபெறும் மாநாட்டையும் சீனா புறக்கணிக்கும் எனக் கூறப்படுகிறது.
அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு பகுதிகளையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் ஜி20 மாநட்டின் கூட்டங்களை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த கூட்டத்தின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறும் பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உலகிற்கு முன் பொய்த்து காட்ட இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் அட்வென்சரஸ் பயணம்.. முதுமலையில் ஆஸ்கர் தம்பதியுடன் உரையாடல்!