டெல்லி: புதிய வகை கரோனா வைரஸான கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து, அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசிகளை கண்டுபிடித்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டிவருகின்றன.
மறுபுறம், தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இதனால் தடுப்பூசிகளை பார்த்து மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
நாட்டின் முதல் மரணம்
இதற்கு மத்தியில் தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்களும் ஏற்படுத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் முதல் திரைப்படம் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நாட்டில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனை அரசு அமைப்பு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. அந்தத் தகவலில், “68 வயது முதியவர் ஒருவர் மார்ச் 8ஆம் தேதி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் கடுமையான ஒவ்வாமை உள்ளிட்ட பக்க விளைவுகளால் அவதியுற்ற அவர் மரணித்துள்ளார். இதேபோல் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 31 பேர் கடும் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இது குறித்து தேசிய நோய்த்தடுப்பை தொடர்ந்து பாதகமான விளைவுகள் (Adverse Events Following Immunisation- (AEFI) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மருத்துவர் என்கே அரோரா கூறுகையில், “இது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) (அதீத ஒவ்வாமை) காரணமாக நிகழ்ந்த முதல் மரணம்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் முதல் 30 நிமிடங்கள் நாம் அங்கேயே காத்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. ஏனெனில், ஒவ்வாமைகள் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்கின்றன. இதற்கு நாம் உடனடி சிகிச்சை அளிக்கும் போது மரணங்கள் தடுக்கப்படுகின்றன” என்றார்.
தொடரும் ஆய்வு
இந்தக் குழுவின் தகவலின்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் 10 லட்சம் பேரில் 2.7 விழுக்காட்டினர் மரணிக்கின்றனர். 4.8 விழுக்காட்டினர் பல்வேறு உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒழுங்காக விசாரணை நடத்தப்பட்ட பின்னரே இது குறித்து முழுமையான விவரங்களை நாம் பெற முடியும் என்றும் அரசின் குழு அளித்துள்ள அறிக்கை வாயிலாக அறியமுடிகிறது.
இது மட்டுமின்றி இதுவரை 31 பேர் தடுப்பூசி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் தடுப்பூசி தொடர்பாக ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 18 பேர் தடுப்பூசி காரணமாக பாதிக்கப்படவில்லை. 7 பேரின் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. மூன்று பாதிப்புகளின் காரணங்கள் கண்டறியமுடியவில்லை.
ஆகையால், தடுப்பூசியில் உள்ள பயன்கள், எதிர்விளைவுகள், சிறிய பாதகங்கள், சமிக்ஞைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடந்துவருகின்றன என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.